No Image Available

Iraiyiyal இறையியல்

 Author: ம.செந்தமிழன்  Category: Semmai Vanam  Publisher: செம்மை  Published: 2021  Country: India  Language: Tamil  Tags: இறையியல் |
 Description:

Iraiyiyal  இறையியல் நூல் – அறிமுகம் (நூலாக்கம்: ஆசான் ம.செந்தமிழன்)
– சிவநங்கை

நெல்லை – பாபநாசத்தில் நடைபெற்ற இறையியல் வகுப்புகளின் தொகுப்பு இப்பொழுது இறையியல் நூலாக ஆக்கம் பெற்று வெளிவருகிறது.

ஆணவம், கன்மம், மாயை, சிவம், சக்தி எனும் ஐந்து தலைப்புகளாக ஆசான் ம.செந்தமிழன் ஆற்றிய உரை தொகுப்பாக்கம் பெற்றுள்ளது.

’யாவும் யாமே’ என இருப்பது சிவம். ’யாவும் யாமே’ எனும் உணர்வாகிய மூலத்திலும் தன் நிலை தனி நிலை எனும் சக்தியின் கூறும் ஒடுங்கியே உள்ளது.

மூலத்திலிருந்து சக்தி தனி தனி என வடிவங்களை விரிக்கிறாள். சக்தி ஓங்கி தனி என விரிதலும் சிவம் ஓங்கி விரிவை அடக்கலும் மூலத்திலிருந்து பேரண்ட விரிவின் ஒவ்வொரு படிநிலையிலும் நடப்பதாகும்.

சிவமும் சக்தியும் மாறி மாறி ஓங்கியும் அடங்கியும் ஆடும் இத்தாண்டவமே இப்பேரண்டத்தில் உள்ள ஒவ்வொரு வடிவமும்.

மூலத்திலிருந்து ஆற்றல் வெளிப்பட்டு, ஆற்றலிலிருந்து அணுவாகிய அருவுருவம் அமைந்து அது ஓசை, ஒளி என விரிந்து வடிவங்கள் அமைகிறது. நுண்ணுயிரி முதலாக பேருடலி ஈறாக அறிவு நிலைகள் அமைதலும் சிந்தனை அமைதலும் கூட சிவ சக்தியின் இத்தாண்டவமே.

ஆசான் ம.செந்தமிழன் இயற்றிய மூல நூல், வடிவு நூல், மற்றும் எண் நூல் ஆகியவற்றில் இம்மெய்யியல் கருத்துகள் விளக்கப்பட்டுள்ளன.

இம்மெய்யியல் கோட்பாடுகளைக் கோர்க்கும் நூலே ஆசான் முன்வைக்கும் இறையியல். மெய்யியல் கருத்துகள் மேன்மேலும் விளக்கவியலா மறை பொருட்களை உள்ளடக்கியது. அவற்றை அறிவின் வழி அளக்கவியலாது. இருந்தும் அறிவு பற்றாக்குறையானது. மேலும் மேலும் தர்க்கங்கள் வழியே விளக்கங்களைத் தேடுவது. இந்த பகுத்தறிவுத் தேடலை முழுமையடையச் செய்வதே இறையியல்.

எல்லையற்று விரியும் இப்பகுத்தறிவுடன், ”அனைத்துமாக இருப்பவன் இறைவனே” என்பதையும் ஒரு சேரக் காணும்போதே அறிவு அடங்கி அளவைக்குள் அடங்கி முழுமை அடைகிறது. ஆணவம் தணிகிறது. கயிற்றின் மறுமுனையிலிருந்து தொடங்கும் பயணம் இது.

இறைவனைப் பற்றிப் பல்லாயிரம் தத்துவ விளக்கங்களும், ’ஆணவம், கன்மம், மாயை’ பற்றிய நடைமுறையுடன் சிறிதும் பொருந்தாத கட்டுக்கதைகளுமாக ஓருலகம் இன்று ‘ஆன்மீகம்’ என்ற பெயரில் இயங்கிக்கொண்டு இருக்கிறது.

சிந்தனையின் மீது படிந்திருக்கும் இந்த அறிவுக் குப்பைகளையெல்லாம் இழுத்துப்போட்டுக் கொளுத்திவிட்டு ஆணவம், கன்மம், மாயைக்கு ஆசான் வழங்கும் எளிமையான விளக்கங்களோ ”இறைவனும் எளிமையே, இறைவனை அடையும் வழியும் எளிமையே” என நம்மை அன்னையென அரவணைத்து வழங்கும் ஆறுதல் மொழிகள்.

நூலின் ஒவ்வொரு தலைப்பில் தரப்பட்டுள்ள விளக்கங்களும் நம் தனித்துவ சிந்தனையுடன் நேரடியாக உரையாடுபவை.

இந்நூலைத் தனியே அமர்ந்து படியுங்கள். மெதுவாகப் படியுங்கள். உங்கள் சிந்தனையுள் போட்டு அமைதியாக அசை போட்டுப் பாருங்கள்.

இயல்புக்குத் திரும்புங்கள், இறையை வேண்டி நில்லுங்கள்.

இந்நூலின் ஒவ்வொரு தலைப்புடனும் நாம் தொடர்ந்து உரையாடுவோம்.

ஈசனடி போற்றி!

***************************************************************
இறையியல் நூலைப் பெற:
https://semmaivanam.org/product/iraiyiyal/

Visit Tamil desiyam for more details about Tamil language, siddha medicine, Tamil books, civilization, culture, politics, people and History.

 Back