No Image Available

Sivapuranam Thiruvasagam சிவபுராணம் திருவாசகம்

 Author: ம.செந்தமிழன்  Category: Semmai Vanam  Publisher: செம்மை  Published: 2021  Pages: 80  Country: India  Language: Tamil  Tags: திருவாசகம் |
 Description:

Sivapuranam Thiruvasagam சிவபுராணம் திருவாசகம்

நூல் அறிமுகம்

மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் – உரை நூல்
எழுதியவர் ஆசான் ம.செந்தமிழன்

-குரு.சரவணன்

மாணிக்கவாசகர் உணர்ந்து எழுதிய திருவாசகம், ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொன்மையும் வரலாறும் கொண்ட இறைத்தமிழின் இலக்கியங்களுள் முக்கியமானது.’ மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்’ என்று மாணிக்கவாசகர் ஓத, இறையே எழுதியதான புகழுடையது திருவாசகம்.

‘திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்’ எனும் வாக்கியம் அதன் உருகவைக்கும் மொழி மற்றும் இறையியல் கருத்துச் செறிவைக் குறிப்பது. இறையியலாளர் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகர், ‘கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க’ என்று இறையே ஆசானாக வாய்க்கப்பெற்றவர். இந்நால்வரும் இறையியலில் மட்டுமல்லாது, மெய்யியலிலும் ஓங்கி வளர்ந்தோர் ஆவர். வாழ்வியல் நெறிகளையும் இவர்கள் மக்கட்கு கற்பித்தனர்.

வரலாற்றின் வழிநெடுகிலும், சமயக்குழப்பங்களும் போர்களும் இறைத்தமிழின் மெய்யியிலாளர்களை ‘சமயவாதிகள்’ என்ற சட்டகங்களுக்குள் அடைக்க முயன்று கொண்டே இருக்கின்றன. இவற்றையெல்லாம் கடந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலும் இந்நூல்களும் கருத்துகளும் சமூகத்தில் நிலைபெற்றிருக்க, ஓதுவார்கள் மற்றும் படியெடுப்போர் ஆகயோரின் பங்கு மிகமுக்கியமானது.

திருவாசகம் போன்ற இறையியல் நூல்கள், பக்தி இலக்கிய வரையறைக்குள் தேங்காமலிருக்க, அவற்றுள் பொதிந்துள்ள மெய்யியல் கருத்துகளை உள்ளது உள்ளவாறு விரித்துரைக்கும் உரையாசிரியர்களின் பங்கு இன்றியமையாதது.

அவ்வகையில், ஆசான் ம.செந்தமிழன் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் என்ற பதிகத்திற்கு எழுதியுள்ள இவ்வுரை, அஞ்ஞானத் திரையை விலக்குகிறது. தொல்காப்பியத்தின் மரபியல் உரையைத் தொடர்ந்து, தொன்மையான தமிழ் இலக்கிய மறைபொருள்கட்கு ஆசான் ம.செந்தமிழன் எழுதியுள்ள உரை இது.

அவரது தொல்காப்பியத்தின் மரபியல் உரையில், பொருள் மற்றும் உரை என்ற தெளிவான நூல் வடிவத்தைக் கையாண்டிருந்தார். சிவபுராண உரையிலும் பின்பற்றப்பட்டுள்ள இவ்வடிவம், மாணிக்கவாசகரின் மறைக்கருத்துகளுக்கு பொருள் வழங்குதல் மற்றும் ஆசான் ம.செந்தமிழன் உணர்ந்த விளக்கவுரை என்ற தெளிவை நூல்வாசிப்போருக்குத் தருகிறது. கூடுதலாக அகரமுதலியில் குறிப்பிட்டுள்ள சிறப்புச் சொற்களின் பொருட்கள், அவற்றை உரையில் பொருத்திப்பார்த்துக்கொள்ள ஏதுவாக இருக்கின்றன.

பதிகத்தின் முதல் ஐந்து வரிகள், திருவாசகத்தை முழுமையாக வாசிக்காதோருக்குக் கூட அறிமுகமான வரிகள். பெரும்பாலும் இறையை வாழ்த்திப்பாடுவதாகவே அறியப்பட்ட வரிகள். அவற்றுக்கான விளக்கத்தில் கீழ்க்கண்டவாறு ஆசான் ம.செந்தமிழன் குறிப்பிடுகிறார்.

“இறைவன் மனிதர்களை நெருங்கும் வழியாக ஆகமங்கள் உள்ளன. கமம் எனும் சொல் ‘நிறைவு’ என்ற பொருளுடையது. ‘ஆ’ உயிர் எனும் பொருள் கொண்டது.
உயிர்களுக்கு நிறைவு வழங்கும் மறைபொருள் ஆகமம் எனக் கொள்ளல் வேண்டும். ஆகமம் எனும் சொல்லுக்கு இன்றுள்ள வெவ்வேறு விளக்கங்கள், சடங்குகளை மிகுதியாகக் குறிக்கின்றன. மாணிக்கவாசகர் ஆகமம் எனும் சொல்லினை இறைவன் அருளிய மறைக்கருத்துகளின் தொகுப்பு என்ற வகையில் எழுதியுள்ளார்.”

இவ்விளக்கம், சடங்குகள் மூலம் இறையை உணரக்கூட இயலாது, மாறாக இறையை உணர்ந்து தன் இயல்பறிந்து நிறைவாக வாழ்வதே இறையை நெருங்கும் வழி என்ற ஆழ்ந்த இறையியலை நிறுவுகின்றது.மாணிக்கவாசகர் வழங்கிய இக்கருத்துகள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் சமூகத்தில் நிலைபெற்றிருந்த கருத்துகளின் தொன்மையையும்,
‘திருவாசகம்’ மனித குலத்திற்கே பொதுவான பொதுமறை என்ற உண்மையையும் பறைசாற்றுகின்றன.

“வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க” என்ற மாணிக்கவாசகரின் வரியும், அதற்கு ஆசான் ம.செந்தமிழன் உரையும், திருவாசகக் கருத்துகள் எக்காலத்திற்கும் பொருந்துபவை என்பதற்கான சான்று. தற்கால சமூகத்தில், சிந்தனையிலும் செயலிலும் உள்ள அசுர வேகமே, வளர்ச்சி என்ற கருத்து நிறைந்துள்ளது. ‘வேகம் கெடுத்தலே இறையடி அடையும் வழி’ எனும் கருத்து, ஊழியில் மனிதகுலத்திற்கே வழிகாட்டுவது என்பதனை மறுக்க இயலாது.

தொல்காப்பிய மரபியல் உரையில் ஆழ்ந்த சொற்களின் பொருளை விளக்கி வியப்பில் ஆழ்த்திய ஆசான், சிவபுராணத்தில் உரைகளின் வாயிலாக ஒரு புது அனுபவத்திற்கு நம்மை இட்டுச்செல்கிறார். சான்றாக “புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க” என்ற வரிக்கான பொருளையும் உரையையும் படிக்கையில் நாம், பூரித்தே ஆகவேண்டும்.

அவரது மெய்யியல் தொடர்பான புத்தகங்களிலும் உரைகளிலும் காணப்பெற்ற கரு, உரு மெய்யியல் கருத்துகள், பேரண்டக்கொள்கைகள், வடிவ இலக்கணங்கள் ஆகியன மூலம் சிவபுராணத்திற்கான உரையைப் புரிந்துகொள்வது அலாதியானது.

“ஈசன், தந்தை, தேசன், சிவன், நிமலன், மன்னன், தேவன் ஆகியனவெல்லாம் இறைவனது வெவ்வேறு இயல்புகளைக் குறிக்கும் சொற்கள்.” எனத் துவங்கும் அவரது உரை, ஒரு மறைநூலை எவ்வாறு உள்வாங்கவேண்டும் என்பதற்கான சான்று.

‘யான் புல், பூடு, கல் போன்ற தாவரமாகப் பிறந்தும், பறவை, விலங்கு, மனிதர், அசுரர், தேவர், கணம், பேய், முனிவர் ஆகிய சங்கமங்களாகப் பிறந்தும் இளைத்தேன். ஆயினும் இந்த மனிதப் பிறவியில்தான் வீடு அடைந்தேன்’ என்ற கருத்துக்கான உரை, சமகால சமயக்குழப்பங்களில் இருந்து நூல் வாசிப்போரைத் தெளிவடையச் செய்யும் உண்மை.

“மணம் கமழும் மலராகிய இறைவனின் உள்ளே இருப்பவர்களுக்கு அவன் நுட்பமானவன். தொலைவில் உள்ளோருக்கு அவன் தொலைவானவன். அம்மலரின் அருகிலிருப்போர்க்கு, அவனும் அம்மலரின் நாற்றம்போல் அருகே இருக்கிறான். இறைவனை ஏற்கும் மனிதர் நிலைக்கு ஏற்ப அவன் தனது மணத்தை வெளிப்படுத்துகிறான். இவ்வாறான நிலைமாற்றங்கள் மனதில் இருப்பனவே. இம்மாற்றங்கள் யாவும் கழிந்து நிலைத்தன்மை வழங்கும்படி நின்ற மறையோனே!”

என்பதான இவ்வுரை இறைவன் அனைவருக்கும் பொதுவானவன். இறை மறுப்பாளர்கள் கூட இறைவனின் குழந்தைகள் எனக்கூறுகிறது. மாறாக சிந்தனையில் மாற்றங்கள் இல்லாத நிலைத்தன்மையே இன்பத்தின் திறவுகோல் என்பதனை தெளிவுபடுத்துகிறது. இத்தகைய ஒரு மறைநூல் எவ்வாறு ஒரு சிலருக்கானதாக மட்டுமாக சுருங்க முடியும்?

‘வல்வினைகளால் இறுக்கம் அடைந்து கிடந்த என்னை நீராக உருக்கி, எனது ஆர் உயிராக நின்றாயே இறைவா’ என்கிறார்.
உயிர் தன் இறுக்கங்களை இறையருளால் விட்டொழித்த பின், அவ்வுயிரின் தன்மைகள் அற்ற ‘ஆருயிர்’ என்ற மேல் நிலையினை அடைகிறது. இறைவனே அந்த ‘ஆருயிர்’ ஆகிறான்.

என்ற ஆசான் ம.செந்தமிழனது உரை, இறுக்கங்களைத் தளர்த்தி நீராக உருகிய உயிர் ‘ஆருயிர்’ என்ற பேருண்மையை உணரச்செய்கிறது. இதனால் தானோ, திருவாசகத்தைக் கற்ற பின்பும், உருகி ஆருயிராக மேம்படாதோர் ஒருவாசகத்துக்கும் உருகார் என்றனர் நம் முன்னோர்?

‘விளங்கொளி’ எனும் ஒரு பதத்தில் மாணிக்கவாசகர் பொதித்து வைத்திருக்கும் மெய்யியல் கருத்துகளை ஆசான் ம.செந்தமிழன் கீழ்க்கண்டவாறு கட்டவிழ்க்கிறார்.

“ஒளியானது, முதல் பூதமாகிய விண்ணாகிறது. அவ்விண்ணில் நிறைவடைகிறது. ஐந்தாம் பூதமாகிய மண் ஆகிறது. அம்மண்ணிலும் நிறைவடைகிறது. விண் முதல் மண் வரையிலான ஐந்து பூதங்களும் ஒளியின் வெளிப்பாடுகளே ஆகும். இந்த ஐந்து பூதங்களும் நிறைந்த பின்னர், ஒளி ‘மிகுதி’ என்ற நிலையினை எட்டுகிறது. அது எக்காலமும் வினையாற்றிக் கொண்டே இருக்கும் ‘விளங்கொளி’ ஆகிறது. இதில், ‘விளங்கொளி’ எனும் பதம் வினைத்தொகை. அதாவது
விளங்கிய ஒளி
விளங்கும் ஒளி
விளங்கப்போகும் ஒளி’ என்று மூன்று காலங்களையும் குறிக்கும் சொல் இஃது.

ஒளி, விண் முதல் மண் வரையிலான பூதங்களாகி நிறைந்த பின்னரும், மிகுதியாக உள்ளது. அம்மிகுதி ஒளி,‘விளங்கொளி’யாக எக்காலமும் வினையாற்றிக் கொண்டே, எல்லை இல்லாத பயணத்தில் உள்ளது என்கிறார் மாணிக்கவாசகர்.”

இவ்வுரை, திருவாசகம் இறைத்தமிழ் மொழியில் எழுதப்பட்டது தற்செயல் அல்ல, அதுவே இயல்பு என்பதற்கான சான்று.
சிவபுராணம் இறையைப்புகழும் புகழ்ச்சிக்கதைகளின் தொகுப்பல்ல, மாறாக இறைத்தமிழைக் கொண்டு இறையே நம்மை அருகிருக்க அழைக்கும் மறைமொழி. இது தமிழ் மொழி தெரிந்தோருக்கு மட்டுமே வாய்க்கப்பெற்ற பேறு. ஆசான் ம.செந்தமிழனின் இவ்விரி நூல், மாணிக்கவாசகர் மடியமர்ந்து சிவபுராணம் கேட்பது போன்றான அனுபவத்தைத் தரவல்லது.

இப்பேறு அனைவர்க்கும் அமைவதாக! அம்மையப்பர் அருள் நிறைவதாக!!

https://semmaivanam.org/product/sivapuranam/

Visit Tamil desiyam for more details about Tamil language, siddha medicine, Tamil books, civilization, culture, politics, people and History.

 

 Back