No Image Available

Thiruvasagam Thiruvandapaguthi திருவாசகம் திருவண்டப் பகுதி

 Author: ம.செந்தமிழன்  Category: Semmai Vanam  Publisher: செம்மை  Published: 2021  Pages: 60  Country: India  Language: Tamil  Tags: Semmai VanamThiruvasagam |
 Description:

Thiruvasagam Thiruvandapaguthi திருவாசகம் திருவண்டப் பகுதி

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவண்டப்பகுதி – உரைநூல் எழுதியவர் ஆசான் ம.செந்தமிழன்

நூல் அறிமுகம் – குரு. சரவணன்

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் முதற்பதிகமான சிவபுராணம் பதிகத்திற்கு ஏற்கனவே உரைநூல் வழங்கியுள்ளார் ஆசான் ம.செந்தமிழன். திருவாசகத்தின் மூன்றாம் பதிகமான திரு அண்டப்பகுதிக்கு அவர் வழங்கியுள்ள பொருளுரையே இந்நூல்.

திருவாசகத்தின் தொன்மை, சிவபுராணம் உணர்த்தும் மறைக் கருத்துகள், அவை பொதித்து வைத்திருக்கும் மெய்யியல் கருத்துகள் எனப் பலவற்றை வெளிப்படுத்தியது அவர் எழுதிய சிவபுராணத்திற்கான உரை.

திரு அண்டப்பகுதிக்கு அவர் எழுதிய இவ்வுரையோ, மேற்குறிப்பிட்ட பண்புகளை மட்டுமல்லாது மாணிக்கவாசகர் போற்றிய சிவநெறிக்கருத்துகளையும் அவற்றின் மூலமான சிவசக்தி புணர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது.

கூடுதலாக, மாணிக்கவாசகரின் உணர்ச்சி வயப்பட்ட இப்பதிகச் செய்யுட்களுக்கு செந்தமிழனது உரை நிறுவும் தலையாய உண்மை – இக்கருத்துகளை கற்று, வார்த்தைகளைப் பழகி, பிழை திருத்தி மாணிக்கவாசகர் அவற்றைப் பதிவு செய்திருக்கவே இயலாது. மாறாக இறை உணர்ந்த இறையியலாளரான மாணிக்கவாசகர் வழியே இறையே உணர்த்திய கருத்துகளே இவை என்பதுவே.

மாணிக்கவாசகர் எங்கெல்லாம் தன் உணர்ச்சிப்பெருக்கை வெளிப்படுத்துகிறாரோ, அங்கெல்லாம் செந்தமிழன் அவர்களது உரையும் நம்மை உணர்ச்சிவயப்படுத்துகிறது. செந்தமிழன் அவர்களது எழுத்துகளும் உணர்த்தப்பட்டவை என்பதுவும் குன்றிலிட்ட விளக்கு.

செந்தமிழன் அவர்களது நூல் வரிசைகளான மூலநூல், ஊழிநூல், வடிவ நூல், எண் நூல், செந்நூல் ஆகியவற்றைக் கற்றோருக்கு திருவாசகமும் அதற்கான அவரது உரைகளும் வாசிப்பதற்கு அலாதியானவை என்பதில் ஐயமில்லை.

‘அண்டப் பகுதியின் உண்டைப் பெருக்கம்’ –
எனும் செய்யுளுக்கான விளக்கமும்,

‘இன்னுழை கதிரின் துன் அணுப் புரைய’ –
எனும் வரிக்கான உரை தரும் காட்சியும்,

‘குழகன்’, ‘பழையோன்’ – எனும் வார்த்தைகள் உணர்த்தும் கருத்துகளும் வாசிப்போரை தொடக்கத்திலேயே பரவசத்திற்கு இட்டுச் செல்பவை.

‘திருத்தகும் அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும்’ எனும் செய்யுளில் அண்டமும் அதன் கூறுகளான கதிரவன் முதலானவற்றிலும் இறைவன் எவ்வாறு வெளிப்படுகிறான் என்று விவரிக்கிறார் மாணிக்கவாசகர். இவ்விவரணையில் ஒன்று கூட உவமையில்லை. மாறாக யாவுமே மெய்க் கருத்துகளே என்று நிறுவுகிறது செந்தமிழன் அவர்களது உரை .

மேற்கூறிய இவ்விரண்டு செய்யுட்பகுதிகளுக்குப் பிறகு மாணிக்கவாசகரின் வார்த்தைகள் யாவும் வாசிப்போரை பரவச நிலையில் இருந்து மயிர்க்கூச்செறியும் நிலைக்கு இட்டுச் செல்கின்றன.

வரிக்கு வரி காண்க, காண்க எனக் களி கொள்கிறார் மாணிக்கவாசகர்.

‘கருமா முகிலில் தோன்றி’ – எனும் அடுத்து வரும் செய்யுட்களில் சிறிது ஆசுவாசப் பட்டுக் கொண்டவரான மாணிக்கவாசகப் பெருமான்,

மீண்டும்

‘நச்சர வாட்டிய நம்பன் போற்றி’ – என்னும் செய்யுட்களில் போற்றி, போற்றி என ஆனந்தக் கூத்தாடுகிறார்.

இக்காட்சி, மாணிக்கவாசகப் பெருமான் அடியார் யாவரையும் இறையைப் போற்றி ஒரு வேட்டலுக்கு அழைப்பதாகவே நம் மனக்கண் முன் விரிகிறது. இவ்வாறாக தொல்காப்பியர் காலத்து அந்தணருக்கு இலக்கணமாக, மாணிக்கவாசகப் பெருமான் இப்பதிகத்தில் ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்டுவித்தல் எனப் பலவற்றையும் நிகழ்த்திக் காட்டுகிறார்.

‘பிரமன் மாலறியாப் பெற்றியோனே’ என்று மாணிக்கவாசகர் இப்பதிகத்தை நிறைவு செய்வதும், அச்செய்யுட்களுக்கான செந்தமிழன் அவர்களின் உரையும் – எது மாணிக்கவாசகப் பெருமானை உணர்ச்சி மேலிடத் திருவண்டப்பகுதியைப் பாட வைத்தது என்பதை வாசிப்போருக்குத் தெளிவு செய்கிறது.

இவ்வாறாக,
கரையில் நின்று கசிந்து,
அலைக் கூச்சலுக்கு நடுவே இரந்து,
பேரலையென ஆர்ப்பரித்து,
ஆழ்கடலில் அமைதி கண்டு
எனப் பல உணர்ச்சி நிலைகளுக்கு நம்மை ஆட்படுத்துகிறது மாணிக்கவாசகப் பெருமானின் இப்பதிகம்.

பெரும்பேறு படைத்த இவ்வாழிப்பயணத்தில், ஆசான் ம.செந்தமிழனது உரை, ஒரு வித்தக திசைகாட்டி என்றால் மிகையாகாது.

இப்பேறு, இந்நூலை வாசிப்போர் யாவர்க்கும் வாய்க்க அம்மையப்பர் அருள் நிறைவதாக!

Visit Tamil desiyam for more details about Tamil language, siddha medicine, Tamil books, civilization, culture, politics, people and History.

*************************************************************
செம்மை நூல்களை பின்வரும் இணையதளத்தில் பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.

இணைய வழியில் திருவண்டப் பகுதி நூலைப் பெற
https://semmaivanam.org/product/thiruvandapaguthi/

 Back